5161.

     ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது
          ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது
     சூதமலங் காதுவிலங் காதுகலங் காது
          ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.

உரை:

     சொல்லுக்கு அடங்காததும் - சொல்லளவுக்கு மடங்காததும், சொல்லத் தொடங்குதற்கு ஆகாததும், மகிழ்ச்சி குறையாததும், தடுக்கப் படாததும், சுருங்காததும், தீயவை நெருங்காததும், கலங்காததும் ஆகியது சோதி பெருஞ் சோதி.

     (6)