118. ஞான சபாபதியே

தாழிசை

    அஃதாவது, சிற்சபையாகிய ஞான சபைக்குத் தலைவனாகிய சிவபெருமானைப் போற்றிப் பாடுவதாகும்.

5241.

     வேத சிகாமணியே போத சுகோதயமே
          மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
     நாத பராபரமே சூத பராவமுதே
          ஞான சபாபதியே ஞான சபாபதியே.

உரை:

     வேத சிகாமணி - வேதங்களுக்கெல்லாம் முடிமணியாக விளங்குபவன். போத சுகோதயமே - யோகானந்த இன்பத் தோற்றமே. சொல்லுதற் கரிய வாக்கு மனங்களுக்கு எட்டாத உயர்நிலைப் பொருளே; நாத தத்துவத்திற்கு மேலும் கீழும் ஆனவனே; குற்றங்களைப் பொருளாகக் கொள்ளாத அமுதம் போல்பவனே.

     (1)