121. கண்புருவப் பூட்டு

தாழிசை

    அஃதாவது, இரண்டு துருவங்களுக்கு இடைவெளியான இலாடத் தானத்தைக் கண் புருவப் பூட்டு என்று சொல்லுகின்றார். இதனை இலாடத்தானம் என்றும் கூறுவர். இலாடத்தானம் சாக்கிரத்தானம் என்றும் சொல்லப்படும். யோகிகள் இதன் நடுவிருந்து நோக்கி ஆங்கு ஒழுகும் அமுது தானத்தை உண்டு மகிழ்வார்கள்.

5258.

          கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
          கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
          ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
          ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

உரை:

     யோகியர்கள் தாம் உய்யும் பொருட்டுச் சிவபெருமானை நினைந்து செய்யும் யோக விளையாட்டு என்பர் என வேதங்கள் உரைப்பதும் இதுவே என்று இயம்புகின்றார்.

     (1)