125. தனித் திருவலங்கல்
ஆன்மநேய ஒருமைப்பாடு
அஃதாவது, திருவருளின் அருமை கண்டு வியந்துரைத்தல். இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் பாடப்பெற்ற காலம் இடம் காரணம் முதலியன விளக்கப் படாமையால் தனித்த அலங்கல் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அலங்கல்
- சொல் மாலை.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5296. எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
செயல்எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
வாய்மிகவும் ஊர்வ தாலோ.
உரை: எல்லா உயிர்களும் பொதுவாகும் என்று கண்டு அவற்றின் பால் மனமிரங்கி வேண்டும் உதவி செய்து அருள்பவர் யாவரோ அந்தச் செவ்விய மனமுடைய நன்மக்கள் செயல்கள் யாவும் திருவருளின் செயலாம் என்று தெரிந்து கொண்டேன்; இவ்வுலகில் குற்றமில்லாத திருநெறி அதுவாகும்; அத்திருவாளர்களுக்கு மகிழ்ச்சியோடு ஏவல் செய்ய என் மனம் இசைந்துளது; அவர்களுடைய புகழை எடுத்தோதுவதற்கு என் வாய் ஊறுகின்றது. எ.று.
ஊர்வன பறப்பன முதலிய எல்லா உயிர்களும் அடங்குதற்கு, “எவ்வுயிரும்” எனக் கூறுகின்றார். உடம்பினால் அல்லது உயிர்கள் யாவும் உணர்வால் ஒத்தனவாகலின் யாவும் அவ்வுணர்வு நிலையில் சமம் என்ற கருத்துப் பற்றி, பொது எனக் கண்டு அவற்றின் எளிமை மென்மைகளை நோக்கி இரங்குதல் அறம் என்பதனால், “இரங்கி உபகரிக்கின்றார் யாவர்” என இயம்புகின்றார். இரங்குதலினும் உபகரித்தல் இன்றியமையாது என்பது பற்றி, “இரங்கி உபகரிக்கின்றார் யாவர்” எனக் கூறுகின்றார். செவ்வியர் - செம்மையான மனமுடையவர். எல்லார்க்கும் இத்தகைய மனம் என்பாராய், “யாவர்க்கும் அந்தச் செவ்வியர்” எனச் சுட்டுகின்றார். அவரது உள்ளத்தில் இருந்து அவர்களுடைய சொற்களையும் செயல்களையும் இயக்குவது திருவருளாதலால், “அவர்தம் செயலனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்” என்றும், அத்திருவருள் நெறி குற்றமில்லாத நெறி என்றற்கு, “கவ்வை இல்லாத் திருநெறி” என்றும் கூறுகின்றார். கவ்வை - குற்றம். அத்தகைய அருள் நெறிச் செல்வர்களுக்கு அடித்தொண்டு அன்போடு புரிதற்குத் தம்முடைய நெஞ்சம் ஈடுபட்டு இருப்பதை புலப்படுத்த, “அத்திருவாளர் தமக்குக் களிப்பால் ஏவல் செய்ய ஒவ்வியது என் கருத்து” என்றும், அவர்களுடைய உயர் புகழை ஓதி மகிழ்தற்கு ஆசை மிகுகின்றது என்பாராய், “என் வாய் மிகவும் ஊர்வதாலோ” என உரைக்கின்றார். ஊறுவது எனற்பாலது ஊர்வது என வந்தது. ஆலும் ஓவும் அசை. (1)
|