5297. எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.
உரை: உயிர்களிடத்துச் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முயிர்போல எண்ணி மனமுவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் மகிழ்கின்றவர் யாவரோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாய் எங்கள் சிவபெருமான் திருக்கூத் தியற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; ஆதலால் அந்த ஞானவான்களின் திருவடிக்கு அடித்தொண்டு புரிதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது. எ.று.
உயிர்கள் யாவும் உணரும் தன்மைத்தாம் என்ற வகையில் வேற்றுமை இன்றியும் உடம்பால் பேதமுற்றும் இருக்கின்றனவாதலின், உடல் வழித் தோன்று பேதத்தை நோக்காமல் உயிராம் தன்மையில் யாவும் சமமே எனக் கருதி, அவ்வகையில் உயிராகிய தாமும் அவையும் ஒருதன்மைய என உணர்ந்தாலன்றி அவற்றின்பால் அருள் புரியும் மனப்பான்மை உண்டாகாதாதலால், “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து” என்றும், எவ்வுயிரும் சமம் என்ற உணர்வு தோன்றிய வழி அவைகட்கு வேண்டும் உதவியினைப் புரிவதற்கு உள்ளம் இசைதலால் அதனைச் செய்தற்கு உற்ற உரிமையும் உடன் தோன்றுதலின், “உரிமை உடையவராய் உவக்கின்றார்” என்றும் உரைக்கின்றார். உயிர்கள் அனைத்தும் சமம் என நினைத்த வழி நினைக்கும் உள்ளம் ஞான மயமாதலின், “அவர் உளந்தான் சுத்த சித்துருவாய்” என்றும், அந்த ஞானத் திருவுள்ளமே சிவஞான சிற்சபையாய்த் திகழ்தலின், அங்கே சிவபெருமான் ஞான நடம் புரிவது இனிது விளங்குதலால், “சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன்” என்றும் இயம்புகின்றார். வித்தகன் - ஞானவான்கள். அவர்கட்குப் பணி செய்தல் சிவத்துக்கே புரியும் திருப்பணியாதலால் அதனைச் செய்தற்கு என் உள்ளம் ஆர்வ முறுகின்றது என்பார், “அந்த வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ” என்று விளம்புகின்றார். (2)
|