5298. கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
தம்உயிர்போல் கண்டு ஞானத்
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
பெருநீதி செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
திருவாயால் புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
வார்த்தைகள்என் றறைவ ராலோ.
உரை: கருணையே உருவாகக் கண்டு எல்லா உயிர்களையும் தம்மோடு ஒத்த உயிரென உணர்ந்து சிவஞானமாக விளங்குகின்ற நன்னெறியின்கண் நின்று தூய சிவ சம்பந்தமுடைய சன்மார்க்கம் என்னும் பெரிய நீதியைச் செலுத்துகின்றவரும் மெய்ப்பொருள் சான்ற அருள் நெறியை உடைய சற்குணமும் சாந்த நிலையும் பொருந்திய புண்ணியவான்களும் ஆகிய சன்மார்க்க ஞானிகள் தம்முடைய தூய வாயால் ஓதிய உரைகளே அருள் நெறிக்குரிய வேதாகமங்களின் முதலிலும் முடிவிலும் சொல்லப்படும் கருத்துரைகள் என்று சான்றோர் உரைத்தருளுவது. எ.று.
கருணை நிறைந்த பண்பில்லாதவிடத்து எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் திறம் எய்தாதாதலால், “கருணை ஒன்றே வடிவாகி” என்று எடுத்து மொழிகின்றார். ஜீவகசாம்ய ஞானம் சிவஞானமாதலின் அதனை, “ஞானத் தெருள் நெறி” எனச் சிறப்பிக்கின்றார். நீதியே சிவம் என ஞானசம்பந்தர் முதலியோர் ஓதுவதால் சிவநெறி ஞானச் செந்நெறியை, “சுத்த சிவசன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருள் நெறி” என்று கூறுகின்றார். சாந்த குண ஒழுக்கமே மெய்ந் நெறியாதலின் அந்நெறி நிற்கும் மெய்ம்மையாளர் என்றற்கு, “பொருள் நெறி சற்குண சாந்தப் புண்ணியர்” என்று புகல்கின்றார். இப்பெருமக்கள் ஓதுவன வேதாகமங்களின் கருத்தென்று வற்புறுத்தற்கு, “வேதாகமத்தின் அடிமுடி சொல் வார்த்தைகள்” என்று சிறப்பிக்கின்றார்.
இம்மூன்று பாட்டுக்களாலும் ஆன்ம நேயத்தால் விளைகின்ற அருளியல் ஒருமைப்பாட்டின் சிறப்பும் அதனை யுடைய பெருமக்களின் பெருமையும் கூறப்படுகின்றன. (3)
|