ச
சாலையப்பனை வேண்டல்
கொச்சகக் கலிப்பா
5299. மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
உரை: என்றும் நிலைப்பற்ற அப்பனாகவும் அம்பலத்தின்கண் பெரிய நடம் புரிகின்ற அப்பனுமாய் எனக்கும் அப்பனாய் ஆறு முகங்களை உடைய முருகப் பெருமானுக்கு அப்பனாய் எவ்வுயிர்க்கும் முன்னும் பின்னுமாய் உள்ள அப்பனாய் உருவுடைய தெய்வங்களுக்கெல்லாம் அப்பனாய் கெடாத பொன்னிறத்தை உடைய சிவனாகிய அப்பனாய் விளங்குபவனே! எனக்கு ஞானப் பொருளைத் தந்தருள்க. எ.று.
பண்டும் இன்றும் என்றும் உள்ள பரமனாதலின், “மன்னப்பா” என்று போற்றுகின்றார். மன்று - பொன்னம்பலம். சண்முகங்களுள் சாமியப்பா - முகம் ஆறுடைய சாமி எனப்படும் முருகப் பெருமானுக்குத் தந்தை. உயிர்களைத் தோற்றுவித்தலும் ஒடுக்குதலும் ஆகிய தொழில்களை உடையவனாதலின், “எவ்வுயிர்க்கும் முன்னப்பா பின்னப்பா” என்று கூறுகின்றார். உருவுடைய தெய்வங்கள் எல்லாவற்றையும் தோற்றுவிப்பது பற்றி சிவமூர்த்தியை, “மூர்த்தி அப்பா” என மொழிகின்றார். மூத்து - விளிதில் இல்லாத பொன்னிறம் கொண்ட பரமன் என்பது விளங்க, “மூவாத பொன்னப்பா” என்று புகல்கின்றார். ஞானப் பொருள் - ஞானமாகிய மெய்ப்பொருள். அப்பா என்பது பாட்டுத் தோறும் சொல்லும் பொருளும் ஒப்ப வருதலால் சொற்பொருள் பின் வருநிலை என்னும் அணியாம். (4)
|