கட
கட்டளைக் கலித்துறை
5300. ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு
பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு
பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்
சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
உரை: ஆதியும் அனாதியும் ஆகியவனே! எங்களுடைய அம்மையாகிய உமாதேவியை ஒரு பாதியாக உடையவனே! அரசர் முதலிய அனைவர்க்கும் அப்பன் ஆகியவனே! சிவத்தின்பால் பத்தி பூண்டொழுகும் அன்பர்களுக்கு அனுபவப் பொருளாய் விளங்குபவனே! நல்ல திருநீறு அணிந்து விளங்குபவனே! பொற் சபையின்கண் திருநடம் புரிகின்ற அருட் சோதியே! சுயஞ் சோதியே! எளியவனாகிய என்னை நினைந்தருள்க. எ.று.
உமாதேவியை இடப்பாகத்தே உடையவனாதல் பற்றி, “அம்மை ஒரு பாதி அப்பா” என்று போற்றுகின்றார். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய அனைவரும் அடங்க, “நிருபாதி” என்று கூறுகின்றார். சிவபத்தர்கள் பெறுகின்ற சிவானுபவம், “சிவபத்தர் அனுபூதி” எனப்படுகின்றது. நல்விபூதி - வெண்ணிறத் திருநீறு; திருவருள் செல்வமுமாம். பொற் பொது - பொன்னம்பலம். சுயஞ்சோதி - தன்னியல்பில் விளங்கும் சோதிப் பொருள். சூழ்தல் - நினைத்தல். (5)
|