5302.

          வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
          சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
          மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
          சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.

உரை:

     கடல்களைப் படைத்தவனே! படைகளில் ஒன்றாகிய வேற்படையை உடையவனே! பிறவியாகிய வெயிலுக்குக் குளிர்ந்த சோலை போல்பவனே! பரஞ்சோதியே! சபையின்கண் பொருந்தி உள்ள கொன்றை மாலையை யுடையவனே! நல்ல சமரச வேத சன்மார்க்க சங்கம் விளங்குகின்ற சாலையப்பனே! என்னைப் பெற்றருளிய அப்பனே! என்பால் வந்து என்னைத் தாங்கி அருளுக. எ.று.

     வேலை - கடல். படை வேலை - படைக் கடல்; பலவேறு படைகளைக் குறிக்கினும் ஈண்டு வேற்படையைக் குறித்து நின்றது. பிறப்பிறப்பாகிய வெவ்விய சூழலின்கண் வாழ்ந்து வருந்தும் உயிர்களுக்கு இனிய குளிர்ந்த சோலை போல் அருளின்பம் வழங்குதலின், “பவ வெயிலுக்கோர் சோலை அப்பா” என்று புகல்கின்றார். வடலூரின்கண் அமைக்கப்பட்டுச் சமரச சன்மார்க்கத்தைப் பரப்புகின்ற சங்கத்திற்குரிய அறச்சாலையை, “நற்சமரச வேத சன்மார்க்க சங்கச் சாலை” என்று சிறப்பிக்கின்றார். இன்னார்க் கென்று பிரிந்து நில்லாது எல்லோர்க்கும் பொது நலம் புரிவது பற்றி, “சமரச வேத சன்மார்க்கம்” என்று எடுத்துரைக்கின்றார். சன்மார்க்க சாலைக்குத் தலைவனாதல் தோன்ற, “சன்மார்க்க சங்கச் சாலை அப்பா” என்று சாற்றுகின்றார்.

     (7)