5303.

          மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
          உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
          அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
          கச்சிஅப் பாதங்கங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.

உரை:

     திருஞானசம்பந்தர் முதலிய பாக்கள் வல்ல பெருமக்கள் பாராட்டித் துதிக்க அம்பலத்தில் விளங்குகின்ற எனக்கு உயர்ந்த அப்பனும், எனக்கே உரிய அப்பனும், என்னைக் கருவுற்றுப் பெற்ற தாய்க்கு அப்பனும், மூன்று கண்களை யுடைய தலைவனும், நிறைந்த உயிர்களுக்கெல்லாம் நலம் புரியும் அப்பனும், கச்சி நகர்க்கண் பொன்மேனி கொண்டு விளங்குகின்ற தலைவனுமாகிய சிவபெருமானே! எளியவனாகிய என்னை அருளுடன் நோக்கி ஆண்டு கொள்க. எ.று.

     திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், மாணிக்கவாசகர் முதலியோர்களை, “அப்பாவலர்” என்று குறிக்கின்றார். அகரம் - உலகறிச் சுட்டு. பல திருப்பாட்டுக்களைப் பாடி மகிழுமாறு தில்லையம்பலத்தில் எழுந்தருளுகின்றமை பற்றி, “அப்பாவலர் போற்றப் பொதுவில் விளங்கிய என் அப்பா” என்றும், தாம் பொதுவில் விளங்கும் கூத்தப் பெருமானைத் தமது தலைமேல் வைத்துப் போற்றும் நிலைமை புலப்பட, “என் உச்சி அப்பா” என்றும் இயம்புகின்றார். தமக்கும் சிவனுக்குமுள்ள உரிமை தோன்ற, “என்னுடைய அப்பா” என்று கூறுகின்றார். உன்னை உற்றுப் பெற்ற அச்சு - என்னைக் கருவுற்றுப் பெற்ற தாய். தந்தையை அச்சன் என்பது பற்றிச் சிவனை, “அச்சு” என்று இயம்புகின்றார். பொன்னிறம் உடையவனாதல் பற்றிச் சிவனை, “தங்கக்கட்டி” என்று பராவுகின்றார். “பொன் செய்த மேனியினீர்” என்று பெரியோர்கள் புகழ்வது காண்க.

     (8)