5304. எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
உரை: அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற பெருமானே! நின்னை நான் எவ்வகைக் கரையும் இல்லாமல் ஓங்கிப் பெருகிய அருட் கடல் என்று உரைப்பேனோ; செம்மை நிறத்தினும் மேம்பட்ட பொன் என்பேனோ; படிகத் திரள் என்பேனோ; திக்குகள் எல்லாவற்றிலும் ஆடையாக உடையவன் என்பேனோ; என் மனத்தின்கண் இன்ப முண்டாக இனிக்கின்ற சர்க்கரை கட்டி என்பேனோ; யாது சொல்லி மகிழ்வேன். எ.று.
இறைவனுடைய திருவருளின் பெருமையை உணர்த்துவதற்கு, “எக்கரையும் இன்றி ஓங்கும் அருட் கடல்” என்று குறிக்கின்றார். செம் பொன்னின் செம்மைப் பண்பினும் உயர்ந்தது இறைவனுடைய மேனி நிறப் பொன்மை எனப் புலப்படுத்தற்கு, “செக்கரை வென்ற பொன்” என்று சிறப்பிக்கின்றார். சர்க்கரை என்பது எதுகை நோக்கிச் சக்கரை என்று வந்தது. தாண்டவன் - கூத்தாடுபவன். (9)
|