5305. ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
உரை: பொன்னம்பலத்தில் திருநடம் புரியும் முக்கண்ணனாகிய சிவபெருமானே! என்னிற் கலந்து என்னுடைய குற்றங்களைப் போக்கி என்னை ஆட்கொண்டாயாதலால் உன்னை உயர்ந்தோங்கும் ஞானமாகிய கண்ணாகியவன் என்பேனோ; உயர்ந்தோங்கிய சிற்றம்பலத்தில் என் போன்றவர்களைச் சேர்த்தருளும் ஞான வெட்டியான் என்று புகழ்வேனோ; திருவருளாகிய பெட்டியில் இருந்து விளக்கம் புரியும் தங்கக் கட்டி என்பேனோ; யாது சொல்லிப் பரவுவேன். எ.று.
ஒட்டுதல் - பொருந்துதல். கோது - குற்றம். அறிவாம் திட்டி - அறிவாகிய கண். திருட்டி என்பது திட்டி என வந்தது. இது ஞான திருஷ்டி எனவும் வழங்கும். வெட்டியான் - ஊர்ப் புறங்களில் ஆட்களைக் கொணர்ந்து சேர்ப்பவன். அடியவர்களைத் தன்னுடைய திருமுன் கொணர்ந்து தொகுப்பது பற்றிச் சிவனை, “நல்ல வெட்டி” என்று குறிக்கின்றார். குற்றம் புரிந்தவரைக் கொணர்ந்து சேர்க்கும் ஊர் வெட்டியான் போலாது சிவஞானத் திருத்தொண்டர்களைக் கொணர்ந்து தொகுப்பது பற்றி, “சிற்றம்பலந்தனில் சேர்க்கும் நல்ல வெட்டி என்கோ” என்று பாராட்டுகின்றார். என்கு - என்று சொல்லுவேன்; இதனைக் குற்றுகர வீற்றுத் தன்மை வினைமுற்று என்பர். (10)
|