மாயை நீக்கம்

 

     அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5306.

          அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
          பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
          மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
          இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.

உரை:

     பெரிய அருட் கடலும் எளியேனாகிய என்னை ஆண்டு கொண்ட சற்குருவும் சிவஞானமாகிய பொருள் நிறைந்த பெரிய அம்பலத்தில் ஆடுகின்ற பூரண வாழ்வை உடையவனே! நாயினும் கடைப்பட்ட என்னுடைய அறிவை மயக்குகின்ற பெரிய மாயை முழுதும் என்னுடைய வினைகளோடு கெட்டொழிந்தன; அறியாமையைச் செய்யும் பெரிய மலத்தடையை நீக்கி ஞானச் சூரியன் எழுந்துவிட்டது காண்க. எ.று.

     அருட் பண்பில் எல்லையற்ற பெருமை உடையவனாதலின், “அருட் பெருங் கடல்” என்று சிவபெருமானைப் பாராட்டுகின்றார். வேண்டப்படுகின்ற திருவருள் ஞானத்தைக் குருவுருவில் எழுந்தருளி நல்கினமை விளங்கச் சிவனை, “என்னை ஆண்ட சற்குருவே” என்று சொல்லுகின்றார். இறைவன் எழுந்தருளித் திருநடம் புரியும் சபை ஞான சபையாயினும் அது வெருவிய வினோதக் கூத்தாதலின்றிப் படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் உலகில் நடைபெறுதற்கு ஏதுவாதலால், “ஞானப் பொருட் பெருஞ் சபை” என்று புகழ்கின்றார். சிவனருளும் இன்ப வாழ்வு குறைவிலா நிறைவுடையதாதலின் அதனை ஆன்மாக்களுக்கு நல்குவது பற்றிச் சிவபிரானை, “பூரண வாழ்வே” என்று கூறுகின்றார். வாழ்வளிப்பவனை வாழ்வு என்று உபசரிக்கின்றார். உலகியல் மாயை அறிவை மயக்குவது பற்றி அதனை, “மருட் பெரும் மாயை” எனக் குறிக்கின்றார். “வினை தீரினன்றி ஞானம் விளையாது” என்று சான்றோர் கூறுதலால், வினைகளோடு மாயையின் செயல்கள் முழுதும் ஒழிந்தன என்பாராய், “மாயை முற்றும் மடிந்தன” என்று உரைக்கின்றார். வினைகளோடு உயிரின்கண் இருந்து அறிவன அறிதற்குத் தடை செய்தலின் ஆணவ மலத்தை, “இருட் பெருந் தடை” என்று இசைக்கின்றார். இதனால் மலமாயை கன்மங்கள் நீங்கினமை எடுத்தோதிச் சிவபோகப் பேற்றுக்குரிய ஞானம் அருளுதல் வேண்டுமென வள்ளலார் வேண்டுகின்றார்.

     (11)