5307. மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
உரை: மாணவப் பருவத்துக்கு மேல் உளதாகிய வாழ்க்கை யுடையார்க்கு ஞானமாய் விளங்குகின்ற ஒளிப் பொருளே! அம்பலத்தில் திருவடியை ஊன்றிப் புதுமை திருநடம் புரிகின்ற ஒப்பற்ற பெருமை சான்ற தலைவனே! என்னைக் கோழை நெறியில் இயக்கி அவம் பெறச் செய்யும் உலகியல் மாயையின் செயல்கள் எல்லாம் என்னுடைய கன்ம மலங்களோடு ஒழிந்தன; என் உயிரோடு நீக்கமின்றிக் கிடக்கும்ஆணவ மலம் செய்யும் இருளைப் போக்கி ஞானச் சூரியனது நல்லொளியும் தோன்றி விட்டது காண்க. எ.று.
வேண்டுவன வேண்டாதன அறியும் பருவமாதலின் இளமைப் பருவத்தை, “மாணவ நிலை” என்று கூறுகின்றார். நல்லறிவு பெற்று வாழும்போது சிவம் ஞான ஒளியாய்த் திகழ்தலின் சிவனை, “மேலே வயங்கிய ஒளியே” என்று கூறுகின்றார். திருவடியைப் பெயர்த்து நடிக்கும்தோறும் தரிசிப்பாரக்குப் புத்தின்பம் விளைவித்தலின், “மன்றில் தாணவ நடம் செய்கின்ற தலைவனே” என்று சொல்லுகின்றார். அறிவைச் செந்நெறியில் செலுத்தாமல் வீண் நெறியில் செலுத்துவதால் மாயா மலத்தை, “கோணவ மாயை” என்று கூறுகின்றார். அலரி-சூரியன்; இங்கே இது ஞானச் சூரியனைக் குறிக்கின்றது. இதனாலும் மலமாயை கன்மங்களின் நீக்கம் கூறிச் சிவபோகப் பேற்றுக்குரிய ஞானம் வேண்டுகின்றாராம். (12)
|