5308. தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
உரை: தற்பரம் பொருளாகிய சிவனே! வேத ஞான முடிவில் விளங்குகின்ற ஒளியே! மோன விரதத்தின்கண் ஞானமயமாய் மேலான சுகத்தைத் தருபவனே! அம்பலத்தில் திருநடம் புரிகின்ற தேவ தேவனே! வன்மை மிக்க மாயா மலத்தின் சேட்டைகள் எல்லாம் கன்மங்களோடு மனமாகிய இல்லத்தில் படியும் மலவிருளைப் போக்கி ஞான ஒளி நல்கும் சிவசூரியன் எழுந்துவிட்டது காண்க. எ.று.
தனக்குத் தானே மேலாகிய பரம்பொருளாதலின் சிவனை, “தற்பரம் பொருள்” என்று கூறுகின்றார். மௌன விரதம் பூண்டுத் தியான யோகம் புரிபவர்க்கு இன்பம் தருவதுபற்றிச் சிவத்தை, “மோனச் சிற்பர சுகமே” என்று போற்றுகின்றார். வற்புறு மாயை - வன்மை மிகுந்த மாயை. சிவஞானத்தாலன்றிப் போக்கலாகாத வன்மை உடையதாதல் பற்றி, “வற்புறு மாயை” எனப்படுகின்றது. வற்பு - வன்பு. உயிர் தங்குதற்கு இடமாதலால் மனத்தை, “இல்” என்றும், அதன்கண் படியும் மலவிருளை, “இற்படும் இருள்” என்றும் இயம்புகின்றார். இம் மூன்று பாட்டும் ஞானப் பேற்றுக்கு இன்றியமையாத மலமாயை கன்மம் ஆகிய மூன்றின் தடை நீங்கினமையும் ஞானப் பேற்றுக்குரிய பக்குவம் எய்தினமையும் தெரிவிக்கப்பட்டன. இனி வரும் பாட்டுக்களில் ஞான சபைத் தலைவனாகிய சிதம்பரேசன் வந்தருளும் திறம் கூறுகின்றார். (13)
|