சிதம்பரேசன் அருள்

 

கலி விருத்தம்

5309.

          சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
          முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
          தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
          மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.

உரை:

     வரதனே! சிற்றறி வுடையவனாகிய நான் செய்த குற்றங்கள் அனைத்தையும் பொருத்தருளுக; அதனால் என்னையும் இப்பொழுதே வெறுக்காமல் ஏற்றருளுக; தெளிவாக அருட் பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானச் செல்வத்தையும் பிறவற்றையும் எளியேற்குத் தந்தருளுக என்று வேண்டினேன். எ.று.

     வரதன் - வரம் தருபவன். அறிவனவற்றை முழுதும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இயல்பிலேயே இல்லாதவன் என்ற கருத்துப்பட, “சிற்றறி வுடைய நான்” என்று சொல்லுகின்றார். தீமைகள் - குற்றங்கள். முனிதல் - வெறுத்தல். தெற்றென - தெளிவாக. அருட்பெருஞ் சோதி - அருள் ஞானமாகிய பேரருள். அருட் சோதியைப் பெறுதற்குரிய அறிவும் பெற்று நுகர்தற்குரிய ஆற்றலும் பெற்ற வழிச் செய்தற்குரிய செய்திறமும் பிறவும் அடங்க, “மற்றவும் அடங்குக” என்று வேண்டுகின்றார். குற்றங்கள் நீங்காதவழி ஞானப் பேறு எய்தாதாதலால், “பொறுத்தருள்” என்றும், “முனிந்திடேல்” என்றும் மொழிகின்றார்.

     (14)