5310.

          என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
          இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
          நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
          வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.

உரை:

     என்று வேண்டி மொழிந்த என்னுடைய விண்ணப்பத்தைச் செவிகளில் ஏற்றருளி, நீ சிறிதும் அஞ்ச வேண்டா; இப்பொழுதே அருட்சோதியாகிய செல்வத்தை உனக்குக் கொடுத்தோம்; நீ மிகவும் மகிழ்க; எக்காலத்தும் மரணம் அடையாத வெற்றி நலத்தைத் தந்தோம் என்று சொல்லிக்கொண்டு சிதம்பரேசன் என்பால் எய்தினான். எ.று.

     செவி மடுத்தல் - காதால் கேட்டல். இறை - சிறிது, அருட் பெருஞ்சோதி தமக்குக் கிடைக்காதோ என்று ஐயுற்று அஞ்சினமை விளங்க, “இறையும் அஞ்சிடேல்” என்று இயம்புகின்றார். நன்று பெரிது என்னும் பொருளது. சாவுறா வென்றி - மரணத்தை வெல்லும் பேராற்றல்.

     (15)