5311.

          மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
          ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
          பூவியிற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
          தேவியற் புரிந்தனன் சிதம்பர ரேசனே.

உரை:

     என்பால் வந்து மன் மனத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு என்னுடைய உயிரிற் கலந்து இவன் என்றும் அவன் என்றும் ஓதும் உலகியல் வேறுபாட்டைப் போக்கி என்னோடு ஓன்றாய்க் கலந்து தெய்வத் தன்மையை எனக்குச் சிதம்பரேசன் தந்தருளினான். எ.று.

     தன்பால் வந்தருளிய சிதம்பரேசன் தனது உள்ளத்தில் புகுந்து உயிரிற் கலந்துகொண்டான் என்பது கருத்து. அதனால் தானும் அவனும் ஒன்றாயினமை இனிது விளங்க, “இவன் அவன் என்று ஓதும் ஓர் பூவியல் பேதமும் போக்கி ஒன்றதாய்த் தேவியல் புரிந்தனன்” என்று தெரிவிக்கின்றார். பூவியல் பேதம் - அவன் என்றும் இவன் என்றும் அவள் என்றும் அது என்றும் வேறுபடுத்தி நோக்கும் உலகியல் வேற்றுமை நிலை. தேவியல் - சீவனாகிய தம்மைச் சிவமாந் தன்மை உடையனாக்குவது. சிதம்பரேசன் - சிதம்பரத்தில் எழுந்தருளும் ஈசன், இவை மூன்று பாட்டாலும் சிதம்பரேசனாகிய அம்பலவாணன் அருட் பிரகாச வள்ளலார் முன் எழுந்தருளித் திருவருள் ஞானம் தந்து தம்மைச் சிவமாக்கிய செய்தி தெரிவிக்கப்படுகின்றது.

     (16)