New Page 2
போற்றிச் சந்த
விருத்தம்
சந்த விருத்தம்
5312. போற்றி நின்அருள் போற்றி நின்பொது
போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
போற்றி நின்முடி போற்றி நின்நடு
போற்றி நின்அடி போற்றி போற்றியே.
உரை: சிதம்பரேசனே! உன்னுடைய திருவருளைப் போற்றுகின்றேன்; உன்னுடைய அம்பலத்தையும் உன்னுடைய புகழையும் உன்னுடைய திருவுருவத்தையும் உன்னுடைய இயல்புகளையும் நீ நிற்கும் நிலைகளையும் நீ காட்டும் அருளும் நெறிகளையும் நின்னால் விளையும் சுகத்தையும் நின்னுடைய சுகத்தையும் நின்னுடைய திருவுள்ளத்தையும் நீ மொழிந்தருளும் சொற்களையும் நின்னுடைய அருட் செயல்களையும் நின்னுடைய குணங்களையும் உன்னுடைய முடியும் நடுவும் அடியுமாகிய கூறுகளை மிகவும் போற்றி வணங்குகின்றேன். எ.று.
அருள் என்றது அருள் ஞான ஒளியை. பொது - திருக்கூத்தாடும் அம்பலம். உரு - சிவத்திற்கமைந்த திருவுருவம். சுகம் என்றது சிவபோகத்தை. (17)
|