5313. போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
போற்றி நின்வரம் போற்றி நின்கதி
போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
போற்றி நின்தயை போற்றி நின்கொடை
போற்றி நின்பதம் போற்றி போற்றியே.
உரை: சிதம்பரேசனே! நீ எழுந்தருளும் இடத்தையும் நினது ஆற்றலையும் நீ புரிந்து அருளும் திருநடனத்தையும் நின் நலங்களையும் உன்னுடைய அருட்டிறங்களையும் தகைமைகளையும் நீ வழங்கும் வரங்களையும் சிவகதியையும் நின்னுடைய கலைகளையும் சிவஞானமாகிய பொருளையும் திருமேனியில் திகழும் ஒளியினையும் ஒளி பரவும் விழியினையும் நினது தயவையும் கொடை நலத்தையும் திருவடியையும் போற்றுகின்றேன். எ.று.
இடம் என்றது சிவன் எழுந்தருளும் அன்பர் உள்ளத்தை; திருக் கோயில்கள் எனினும் அமையும். அருள் புரியும் வகை பலவாதலின், “நின் திறம் போற்றி” என்றும், தகைமை விளங்க, “நின் தரம்” என்றும் கூறுகின்றார். சிவயோக நிலையை, “நின் கதி” என்றும், செயல் வகையை, “கலை” என்றும் குறிக்கின்றார். சிவஞானமே மெய்யான பொருளாதலின், “பொருள்” என்றும், மேலாய பொருட்கள் எல்லாவற்றிலும் மேலாயது திருவருள் ஞான ஒளியாதலால், “ஒளி” என்றும், அது பரந்து விரிந்து விளங்கும் சிதாகாசத்தை, “நின் வெளி” என்றும் விளம்புகின்றார். தயைவின்றிக் கொடை இல்லையாதலால், “நின் தயை போற்றி நின் கொடை போற்றி” என்று உரைக்கின்றார். (18)
|