5314.

     போற்று கின்றஎன் புன்மை யாவையும்
          பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
     ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
          கறிவு தந்தபேர் அறிவ போற்றிவான்
     காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
          காணக் காட்டிய கருத்த போற்றிவன்
     கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
          கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.

உரை:

     சிதம்பரேசனே! உன்னைப் போற்றித் துதிக்கின்ற என் குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தருளிய நினது மிகப்பெரிய பொறுமைப் பண்பைப் போற்றுகின்றேன்; நீ எனக்குச் செய்தருளிய பேரருளின் பொருட்டு உனக்கு யாது கைம்மாறு செய்வேன்; செய்வகை அறியாமல் அலமருகின்றேன்; எனக்கு அறிவருளிய பேரறிவை உடையவனே! உன்னைப் போற்றுகின்றேன்; வானம் காற்று நெடிய தீ நீர் நிலம் ஆகிய பூதங்களையும் நான் கண்ணில் காணுமாறு காட்டிய தலைவனே! உன்னைப் போற்றுகின்றேன்; வன்மை மிக்க கூற்றுவனை உதைத்தொழித்து அழிவில்லாத சிவனுருவை யான் கொள்ள வைத்த உனது உயர்ந்த கொள்கையைப் போற்றுகின்றேன். எ.று.

     புன்மை - குற்றம். சிற்றறிவு உடையனாதலின் என்பால் உளவாகும் குற்றங்கள் மிகப் பலவாகவும் அவை அனைத்தையும் பொறுத்தருளியது பெருஞ் செயல் என வியக்குமாறு தோன்ற, “என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை” என்று புகழ்கின்றார். இறைவன் அருளும் நலங்களுக்குக் கைம்மாறின்மையின், “என் ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன்” எனக் கூறுகின்றார். உயிர் அறிவு சிறுமை உடையதாதலின் பெரும் பொருள் அறிவுக்குச் சிவனது அருளறிவு இன்றியமையாமை பற்றி, “எனக்கு அறிவு தந்த பேரறிவு” என்று புகழ்கின்றார். வானம் முதலிய பூதங்களுக்குக் காரணமாகிய ஐவகைத் தன் மாத்திரைகளையும் அவற்றிற்கு மூலமாகிய அசுத்த மாயையையும் உணர்த்தினமை விளங்க, “ஐந்தும் நான் காணக் காட்டிய கருத்த” என்று கூறுகின்றார். நமனை உதைத்து அவனால் விளையும் மரணத்தைப் போக்கியது தன்னை அடைந்தவர்கள் மரணமில்லாத பெருவாழ்வு பெறலாம் என்ற கொள்கையை விளக்குவது புலப்பட, “அழிவிலா உருக்கொள்ள வைத்த நின் கொள்கை” என்று தெரிவிக்கின்றார்.

     இம்மூன்று பாட்டாலும் தன் உள்ளம் புகுத்து உயிரிற் கலந்து தன்னைச் சிவமாக்கிய சிதம்பரேசனுடைய பேரருளுக்கு நன்றி கூறுபவர் போல வடலூர் வள்ளல் அப்பெருமானைப் போற்றிப் புகழ்கின்றார்.

     (19)