ப
பாடமும் படிப்பும்
எண்சீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5315. அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
உரை: சிதம்பரேசன் நடம் புகரிகின்ற ஞான சபைக்குச் சென்று சேர்ந்தேன்; அதனால் என் மனோபலம் நிறைந்தேன்; அங்கே அப்பனாகிய கூத்தப் பெருமானைக் கண்டு உள்ளம் செம்மையுற்றேன்; மேலுலக தேவர்கள் வியக்க இவ்வுலகில் வாழ்ந்து இருந்தேன்; உணரத் தகுவனவற்றைப் பிறர்பால் சென்று ஓதாமல் உணர்ந்து கொண்டேன்; அதனால் மேல் நிலை எய்தினேன்; விரும்புவாரைத் தன்னோடு அணைத்துக் கொள்ளும் எம்பெருமானும் எங்கட்கு நாயகனும் தாயுமான சிவனை இன்பம் பொங்கப் பாடிப் பாடியவற்றை இன்றும் படிக்கின்றேன்; அவனது அருள் படிப்பித்த நெறியை என்றும் படிப்பேன். எ.று.
அம்பலம் - கூத்தப் பெருமான் ஆடல் புரிகின்ற ஞான சபை. அவரவர் மனோபலமே அவர்கட்கு உரிய பலமாதலால் அது “எம்பலம்” எனப்படுகின்றது. மனத்திண்மை கூறினவர் அதனுடைய செம்மைத் தன்மையும் உடன் கூறலுற்று. “செப்பம் உட்கொண்டேன்” என்று தெரிவிக்கின்றார். உம்பர் - தேவருலகு. இம்பர் - மண்ணுலகு. மீதானம் - உயர்ந்த நிலை. நம்புதல் - விரும்புதல். தாயாய்த் தலையளித்தல் பற்றி இறைவனைத் “தாயவன்” என்று கூறுகின்றார். பம்புதல் - இன்பம் நிறைந்து பொங்குதல். பாடுதலும் படித்தலும் திருவருளின் இயக்கமாதலின், “எனக்குப் படிப்பித்தவாறே” என்று எடுத்தோதுகின்றார். (20)
|