5316. கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
அள்ளக் குறையா வள்ளற் பொருளை
அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
உரை: மனம் ஒன்றி அன்பாற் கனிந்து அம்பலத்தில் புகுந்தேனாதலால் கள்ளமில்லாத உள்ளத்தைப் பெற்றேன்; மிகவும் தெளிந்த அருள் வெள்ளத்தை உண்டுச் செய்வகை பலவற்றையும் கற்று உய்யும் வகையை எய்தினேன்; கொள்ளக் குறையாத அருட் செல்வத்தையுடைய வள்ளற்பெருமானும் அம்பலத்தில் விளங்கும் அருட்சோதியும் எமக்கு ஞானப் பெருவாழ்வை நல்கும் பெருமானுமாகிய சிவபெருமானைப் படுக்கையிலிருந்து பாடிய பாட்டை இன்றும் படிக்கின்றேன்; என்னைத் திருவருள் செலுத்திய நெறியில் இனிமேலும் படித்து மகிழ்வேன். எ.று.
அம்பலத்தில் புகுந்து அங்கே அருள் புரிந்தொழுகும் ஆண்டவனைக் கண்டதினால் என் உள்ளத்திலிருந்த கள்ளம் ஒழிந்தது என்பாராய், “கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன் கள்ளத்தை யற்ற உள்ளத்தைப் பெற்றேன்” என்று கூறுகின்றார். ஞான அமுதமாய்க் காட்சி தந்தமையின், “தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்” என்று உரைக்கின்றார். கன்றுதல் - பலகாலும் நினைத்தல். ஞானமூர்த்தியாதலால் சிவனை, “தெள்ளத் தெளிந்த வெள்ளம்” என்று குறிக்கின்றார். பள்ளி - படுக்கை. கொடுக்கக் குறைபடாத அருட்செல்வன் என்றற்கு, “அள்ளக் குறையா வள்ளற் பொருள்” எனப் பாராட்டுகின்றார். (21)
|