5317.

     காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
          கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
     வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
          வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
     ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
          ஐயர் திருவடிக் கானந்த மாகப்
     பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
          படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.

உரை:

     ஐம்புலன்களாகிய வேடர்களுக்கு வாழ்வளிக்கும் உலகியல் வாழ்வைக் கடந்து ஞானம் விளையும் திருவருள் நாட்டை அடைந்தேன்; அதனால் கவலைகளைத் துறந்து உவகை மிகுந்தேன்; பின்பு ஞான வீட்டுக்குள் புகுந்து தேடி நின்ற ஞானவமுதை வேண்டுமளவு உண்டு மகிழ்ந்தேன்! அதன் பயனாக வேதாகமங்களின் விளைவாகிய ஞானமெல்லாம் பெற்றேன்; திருநடம் புரிந்து அம்பலத்தின்கண் எழுந்தருளும் ஐயராகிய சிவபெருமானுடைய திருவடிக்கு இன்பமுண்டாக நான் பாடிய பாட்டுக்களைப் படித்தேன்; இன்றும் படிக்கின்றேன்; திருவருள் காண்பித்தவாறு மேலும் படிப்பேன். எ.று.

     ஐம்புலன்களாகிய வேடர்கள் நுகர்வன நுகர்ந்து கழியும் உலகியல் வாழ்வு இங்கு காடு எனப்படுகிறது. உலகியல் நெறிக்கு அப்பாலாய் விளங்கும் அருளுலகம் நாடு எனப்படுகின்றது. அருள் வாழ்வின் மேலதாய் விளங்கும் வீடு பேற்றினை எய்தினமை புலப்பட, “வீட்டைப் புகுந்தேன் தேட்டமுது உண்டேன்” என்று செப்புகின்றார், வேதாகாமத்தின் விளைவாவது வைதிக ஞானமும் ஆகம ஞானமும் நல்கும் ஞான இன்பம். ஆடல் ஆட்டு என வந்தது.

     இம்மூன்று பாட்டுக்களாலும் அம்பலவாணனைக் கண்டு தரிசித்து இன்புற்றதைப் பாடிப் படித்து மகிழ்கின்ற திறம் கூறப்பட்டது.

     (22)