பாட்டும் திருத்தமும்

 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5318.

    தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
    கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
    வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
    யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

உரை:

     எந்தையே! தேன்போல் இனிய பாடல்களை மெய்யன் புடைய அடியவர்கள் பாடி இன்புறுமாறு அம்பலத்தில் ஆடுகின்ற சிவ பரம்பொருளே! ஞானமயமான கானங்களைப் பாடிக்கொண்டு சிவகாம வல்லியாகிய உமாதேவி மகிழ்கின்ற சிறப்புடைய கணவனே! நல்ல வானவர்கள் ஒருபால் பாட வைதிகர்கள் ஒருபால் வேதம் ஓத என் உள்ளத்தின்கண் விளங்குகின்ற மன்னவனே! நின்னை யான் பாட அப்பாட்டிலே நீ கேட்டுத் திருத்தம் செய்ய நான் என்ன தவத்தைச் செய்தேனோ. எ.று.

     தேன்போல் இனிக்கும் பாடல்களைத் “தேன் பாடல்” என்று சொல்லுகின்றார். சிவபெருமான் அம்பலத்தில் நடிக்கும்போது மெய்யன்பர்களாகிய ஞானவான்கள் தேன் போல இனிய பாடல்களைப் பாடுகின்றார்கள் என்பது கருத்து. சிவஞானக் கானத்தை, “ஞானக் கான்” என்று குறிக்கின்றார். கானம் என்பது ஈறுகெட்டுக் கான் என வந்தது. உள்ளக் காட்சியில் வானவர்களும் மறை ஓதும் வேதியர்களும் பாடிப் பரவுவது தோன்றுவதால், “நல்ல வான் பாட மறை பாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா” என்று போற்றுகின்றார். யான் பாடும் பாட்டை என் போன்றார் திருத்துவது இயல்பு அங்ஙனமிருக்க, நீ போந்து திருத்துவது எனத் தவப்பயன் என்று புகழ்கின்றாராதலால், “நின்னை யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ” என்று வடலூர் வள்ளல் இதனால் மகிழ்கின்றார்.

     (23)