5319.

    ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
    ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
    பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
    யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

உரை:

     எந்தையே; பசுவின் பாலும் நறிய தேனும் சர்க்கரையும் கலந்து தெளிவித்த அமுது போன்றவனே! என்னுடைய உடலிலும் உள்ளத்திலும் உயிரின்கண்ணும் ஒளி செய்கின்ற ஒளிப்பொருளே! வேதங்கள் மெல்லிய பாட்டுக்களைப் பாடித் துதிக்க என் உள்ளத்தின்கண் ஆடுகின்ற பொன் போன்றவனே! உன்னை யான் பாட அப்பாட்டிலே நீ திருத்த என்ன தவம் செய்தேனோ அறியேன். எ.று.

     ஆன்பால் - பசுவின் பால். நறுந்தேன் - பல்வகை மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட தேன். சிவத்தின் அருளொளி உடம்பிலும் உளத்திலும் உயிரிலும் பாய்ந்து விளங்குதலால், “என்றன் ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே” என்று ஓதுகின்றார். பூம்பாடல் - பூப்போல் மெல்லிய பாட்டுக்கள்.

     இவை இரண்டு பாட்டுக்களாலும் வள்ளற் பெருமான் பாடிய பாட்டுக்களை அவர் அறியாமல் இறைவன் திருத்தி அருளியது கண்டு வியந்து பாடியனவாகும்.

     (24)