அம
அம்பலத்தரசே
அபயம்
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5320. பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
செல்வமே நான்பெற்ற சிறப்பே
மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
வாழ்வித்த என்பெரு வாழ்வே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
உரை: பொருள் நிறைந்த பெரிய ஒப்பற்ற மெய்ம்மைச் சிவபோக உருவே! எளியனாகிய என்னைப் புறத்திலும் அகத்திலும் கலந்து விளங்குகின்ற பெரிய சிவ பரம்பொருளே! சுத்த சன்மார்க்கத்தால் பெறலாகும் அருட் செல்வமே! நான் பெற்ற சிறப்பாகிய பரம்பொருளே! மருட்சி நிறைந்த பெரிய உலகியலாகிய கடலைக் கடக்கச்செய்து என்னை அருள் நெறியில் வாழ்வித்த எனது பெரிய இன்ப வாழ்வே! திருவருள் ஞானப் பெருஞ்சோதி விளங்கும் அம்பலத்தின்கண் ஆடுகின்ற அருளரசே! எனக்கு அம்மையும் அப்பனுமாகிய பெருமானே! நான் உன்னிடம் அபயம் புகுந்தேன்; என்னை ஆண்டருள்க. எ.று.
பெருமையும் மெய்ம்மைச் சான்ற சிவபோகத்தையும் அருளும் பரம்பொருளாகிய சிவனை, “பெருந் தனி மெய்ப்போகமே” என்று விளம்புகின்றார். தமக்கு அகத்தும் புறத்தும் எங்கும் கலந்து நின்று காணப்படுவன எல்லாவற்றின் உண்மைகளைத் தெரிந்துணர்ந்து இன்புறச் செய்தலின், “என்னைப் புறத்தினும் அகத்தினும் புணர்ந்த தெருட் பெருஞ் சிவமே” என்று தெரிவிக்கின்றார். உலகியல் வாழ்வில் மயக்கமும் கலக்கமும் எல்லையின்றிப் பெருகி வருதலால் அதனைத் திருவருள் ஞானத்தால் தெளியக் காட்டி வாழ்வித்தமை பற்றிச் சிவ பெருமானை, “மருட் பெருங் கடலைக் கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெருவாழ்வே” என்று பேசுகின்றார். திருவருள் ஞான விளக்கம் இனிது விளங்குதல் பற்றி அம்பலத்தாடும் பெருமானை, “அருட் பெருஞ் சோதி அம்பலத் தரசே” என்று அறிவிக்கின்றார். (25)
|