5321. பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
தேடியும் காண்கிலாச் சிவமே
மருட்பெரும் பகைதீர்த் தென்னை ஆட்கொண்ட
வள்ளலே தெள்ளிய அமுதே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
உரை: மெய்ம்மைப் பொருள் நிறைந்த பெரிய வேதங்களும் ஆகமங்களும் சொல்லுகின்ற மேன்மேல் அடுக்கிவந்த அளவில்லாத காலங்களில் தெளிவமைய அளவில்லாத காலாதீதமாகிய பெருவெளி புகுந்து தேடியும் காண்பதற்கரிதாகிய சிவபரம்பொருளே! மயக்கமாகிய பெரும் பகையைப் போக்கி என்னை ஆண்டுகொண்ட வள்ளற் பெருமானே! தெளிந்த அமுதமாகியவனே! அருட் பெருஞ் சோதி நிலவும் அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே! அம்மையும் அப்பனுமாகியவனே! நான் உனக்கு அபயம். எ.று.
பொருளுடைய நூல்களாதலால் வேதாகமங்களை, “பொருட் பெருமறைகள்” என்று புகல்கின்றார். மறைகளும் ஆகமங்களும் எண்ணிறந்தவாகலின், “அனந்தம்” என்று உரைக்கின்றார். அனந்தமாகிய மறையாகமங்கள் அளவிலாக் காலமாகத் தேடியும் சிவ பரம்பொருள் காணப்படாதாயிற்று என்பது கருத்து. உலகியல் மயக்கம் உயிரறிவை உண்மை காண வொட்டாது தடுத்தலால் அதனை, “மருட் பெரும் பகை” என்று குறிக்கின்றார். பரசிவம் ஒளிரும் சிதாகாசத்தை, “மேற் போந்த தெருட் பெருவெளி” என்று செப்புகின்றார். தெருள் - தெளிவு. (26)
|