5322.

     பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
          புகன்றபோ தாந்த நாதாந்தம்
     தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
          தத்தினும் தித்திக்கும் தேனே
     மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
          மாபெருங் கருணையார் அமுதே
     அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
          அம்மையே அப்பனே அபயம்.

உரை:

     பொருள் நிறைந்த பெரிய ஒளியைச் செய்கின்ற கலாந்தம், யோகாந்தம், போதாந்தம், நாதாந்தம், தெளிவு தருகின்ற பெரிய வேதாந்தம், ஞான ஒளி செய்யும் சித்தாந்தம் இவை எல்லாவற்றிலும் மேலாக இனிக்கின்ற தேன் போன்றவனே! உலகியல் மயக்கமாகிய இருளைப் போக்கி என்னை வளர்த்தருளும் மிகப்பெரிய கருணைச் சுவை பொருந்திய அமுதமே! அருட் பெருஞ் சோதி திகழும் அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே! அம்மையும் அப்பனுமாகிய பெருமானே! அபயம் புகுந்த என்னை ஆண்டருள்க. எ.று.

     பொருளாய்க் கொண்டு ஆராய்வார்க்குப் பெருஞானத்தை தருவனவாதலால் யோகாந்தம் கலாந்தம் ஆகியவற்றை, “பொருட் பெருஞ் சுடர் செய் கலாந்த யோகாந்தம்” என்றும், கற்ற நூற் பொருளைத் தெளிவு செய்வனவாதலால், “தெருட் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தம்” என்றும் தெரிவிக்கின்றார். அருள் நெறியில் கருணையும் இன்பமும் பெறுவித்தமை புலப்பட, “எனை வளர்க்கும் மாபெருங் கருணை ஆரமுதே” என்று கட்டுரைக்கின்றார்.

     இவை மூன்று பாட்டாலும் சிவயோக போகம் முதல் சித்தாந்தம் வரை உள்ள பாசபசு ஞானங்களில் மாட்டாமை எடுத்தோதி வடலூர் வள்ளலார் அம்பலத்தரசனாகிய சிவனிடம் அபயம் புகுகின்றார். இனி வரும் ஐந்து பாட்டுக்களிலும் அருட் பெருஞ் சோதியால் தாம் அபயம் புகுவதையே எடுத்துரைக்கின்றார்.

     (27)