அருட்பெருஞ் சோதி அபயம்

 

நேரிசை வெண்பா

5323.

          அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
          அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
          சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
          சோதி அபயம் துணை.

உரை:

     அருட் பெருஞ் சோதியாகிய ஆண்டவனே! உனக்கு நான் அபயம் புகுகின்றேன்; ஞானச் சோதியாகிய சிவனே! பொன்னிறச் சோதியாகிய பரம்பொருளே! அபயம் புகுந்தேனாதலின் எனக்குத் துணை செய்க. எ.று.

     அருட் பெருஞ் சோதி ஆண்டவன்பால் அபயம் புகுகின்றாராதலால், அருட் பெருஞ் சோதி உருவாகிய ஆண்டவனை மும்முறை “அருட் பெருஞ் சோதி அபயம்” என்று கூறுகின்றார். அருட் சோதி ஆண்டவன் அருவுருவில் ஞானச் சோதியாகவும் உருவுருவில் பொன்னிறச் சோதியாகவும் விளங்குவது பற்றி, “சிற்சோதி” என்றும், “பொற் சோதி” என்றும் புகல்கின்றார். அபயம் புகுந்த என்னைக் காத்தருள்க என்று வற்புறுத்தற்குத் “துணை” என்று சொல்லுகின்றார்.

     இப் பாட்டுக்கள் ஐந்தும் அந்தாதி தொடையில் அமைந்தன என அறிக.

     (28)