5324. துணைவா அபயம் துயர் அகல என்பால்
அணைவா அபயம் அபயம் - பணைவாய்
வடலா அபயம் வரதா அபயம்
நடநாய காஅபயம் நான்.
உரை: எனக்குத் துணைவனும், என்னுடைய துன்பங்கள் நீங்க என்பால் வருபவனுமாகிய சிவனே! உனக்கு நான் அபயம்; சோலைகள் சூழ்ந்த வடலூரின்கண் எழுந்தருளுபவனே! வேண்டும் வரங்களைத்தருபவனே! அம்பலத்தில் திருநடம்புரியும் நாயகனே! நான் உனக்கு அபயம் ஆயினேன்; என்னை ஆண்டருள்க. எ.று.
தன்பால் இறைவன் எழுந்தருளுதல் துயர் நீக்கத்தின் பொருட்டு என வற்புறுத்தற்கு, “துயர் அகல என்பால் அணைவா” என்று உரைக்கின்றார். அணைவர் - அணைபவர். பணைவாய் வடல் - சோலைகள் சூழ்ந்த வடலூர். (29)
|