5325.

          நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
          தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
          மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
          ஐயா அபயமப யம்.

உரை:

     ஆன்மாவாகிய யானாகியும் சிவம் ஆகிய தானாகியும் அம்பலத்தில் நடம் புரிகின்றவனே! தேன் மயமாய் என்னுள் இனிக்கின்ற சிவனே! வான் முழுதுமாகிய எப்பொருளும் உடம்பாக உடையவனே! மலக் கலப்பில்லாத தூயவனே! என்னுடைய தலைவனே! யான் உனக்கு அபயம். எ.று.

     உயிர்க்குயிராகியும் அவற்றின் வேறாகியும் இலங்குவது பற்றிச் சிவனை, “நானாகித் தானாகி நடித்தருள்கின்றாய்” எனவும், அன்பர்கள் எண்ணுந்தோறும் தேனாய் இனிப்பது பற்றிச் சிவனை, “தேனாய் இனிக்கும் சிவ அபயம்” எனவும் கூறுகின்றார். வான் முதல் நிலம் நீராக உள்ள தத்துவங்கள் பலவும் தனக்கு உருவாக அமைந்தவனாதலால் சிவபரம்பொருளை, “வானாடும் மெய்யா” என்று உரைக்கின்றார். தேவர்கள் விரும்புகின்ற மெய்ப்பொருளானவனே என்றலும் ஒன்று. விமலன் - மலத் தொடர்பு இல்லாதவன்.

     (30)