5326.

          அபயம் பதியே அபயம்பரமே
          அபயம் சிவமே அபயம் - உபய
          பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
          விதத்தில் கருணை வினை.

உரை:

     எல்லா உலகு உயிர்கட்கும் பதிப் பொருளே! பரம் பொருளே! எல்லாவற்றிற்கும் சிவமாகிய பரம்பொருளே! நான் உனக்கு அபயம்; உனது இரண்டாகிய திருவடிக்கு நான் அபயம் புகுந்தேன்; ஆதலால் அன்போடு என் உள்ளத்தில் அமர்ந்து நன்முறையில் எனக்குக் கருணை புரிந்தருள்க. எ.று.

     எல்லா உலகுகளுக்கும் உயிர்ப் பொருள் உயிரின்பப் பொருள் எல்லாவற்றிற்கும் தலைவனாதலால் சிவனை, “பதி” என்றும், எல்லாப் பொருட்கும் மேலானவனாதலால், “அறம்” என்றும், இங்கே “பரம்” என்றும், எல்லா உயிர்கட்கும் இன்பம் அருளுவதால் “சிவம்” என்றும், சிறப்பித்துரைகின்றார். மறக் கருணை புரியாது அறக் கருணையே செய்க என வேண்டுவாராய், “நல்விதத்தில் கருணை வினை” என்று வேண்டுகின்றார்.

     (31)