5327.

          கருணா நிதியே அபயம் கனிந்த
          அருணா டகனே அபயம் - மருணாடும்
          உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்
          பொள்ளற் பிழைகள் பொறுத்து.

உரை:

     அருட் செல்வனே! அருள் நிறைந்த நன்னாட்டை உடையவனே! நான் உனக்கு அபயமாயினேன்; மருள் நிறைந்த என் உள்ளத்தில் இருக்கும் கவலைகளையும் என்னுடைய வன்மை மிகுந்த மனத்தில் குறைபட்டு நிற்கும் குற்றங்களையும் பொறுத்து நீக்கி அருளுக. எ.று.

     இறைவன் அருட் செல்வனாதலால் அவனுறையும் நாடும் அருள் நிறைந்த நன்னாடாம் என்பது பற்றி, “கனிந்த அருள் நாடு அகனே” என மொழிகின்றார். அருள் நாடு அகனே எனப் பிரித்து அருள் நிறைந்த உள்ளம் பொருந்திய ஆன்மாக்களை விரும்புபவனே என்றும், அருள் நாடகனே எனப் பிரித்து, திருவருள் ஞானத்தை நல்கும் திருநடனத்தைப் புரிபவனே என்றும் பொருள் கூறுவதுண்டு. பிழைகள் மனத்திலும் கவலைகள் உளத்திலும் பொருந்துவனவாதலால், “வன்மனத்துப் பிழைகள்” எனவும், “உள்ளக் கவலை” எனவும் பிரித்துரைக்கின்றார். பிழைகள் மனத்தின்கண் சிறுசிறு துளைகள் போலப்பதிதல் விளங்க, “வன்மனத்துப் பொள்ளற் பிழைகள்” என்று புகல்கின்றார்.

     (32)