எண
எண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
5328. இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே அறிவீர்
பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.
உரை: உலகத்தவரே! இணங்கி வாழ்வது அறியீர்; அன்பொடு பழகுதல் அறியீர்; நீங்கள் இருந்த நிலையை உணர மாட்டீர்கள்; செல்லும் இடமும் அதற்குரிய வழியும் அறிகிலீர்; இவ்வுடம்பு எடுத்த காரணத்தையும் அதனைச் செலுத்துதற்குரிய வழியினையும் அறிகின்றிலீர்; அம்பலத்தின்கண் உலகியல் மாயை செய்கின்ற கலக்கம் ஒழிய இறைவன் நடிக்கின்ற விளக்க நிலையை அறிவீர்களோ; ஒருவரோடு ஒருவர் பிணங்கும் முறையையும் அவர்கள் செய்கின்ற பித்தலாட்டங்களையும் குற்றங்களையும் செய்வதே அறிவீர்; மிகுந்த உணவைப் பெரிய வயிறாகிய பாதாளத்தில் போட அறிந்திருக்கிறீர்கள்; மனமுள்ள காய்கறிகளையும் புலால் உணவுகளையும் வறுவல்களையும் பொறியல்களையும் வடை செய்து சமைத்த குழம்பையும் இனிய சாற்றையும் உண்டு நிறைக்க வல்லவர்களாய் இருக்கின்றீர்கள். எ.று.
இணக்கம் - அன்பொடு கூடுதல். இதம் - அன்பொடு பழகுதல். தடம் - வழி. உடம்பை எடுத்த கணக்கு - உடம்பை எடுத்த காரணம். வழக்கு - நெறி. உலகியல் வாழ்க்கையின்கண் உளதாகின்ற மயக்கத்தைப் போக்குதற்காகவே இறைவன் அம்பலத்தின்கண் திருநடம் புரிகின்றான் என்ற விளக்கமான உண்மையைப் பலர் அறிவதில்லையாதலால், “அம்பலத்தே மாயைக் கலக்கமற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ” என்று வினவுகின்றார். பிணக்கு - அன்பின்றி ஒருவரோடு ஒருவர் பூசலிட்டு வேறுபடுதல். புரட்டு - பொய் கூறுதல். நாள்தோறும் இடவேண்டுதலின் வயிற்றைப் பாதளமாக உருவகம் செய்து, “பெருவயிற்றுப் பிலத்தில் இட அறிவீர்” என உரைக்கின்றார் - மணக்கறி - காய்கறிகள். பிணக்கறி - புலால் உணவு. (33)
|