5329.

     உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
          ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
     கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
          கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
     வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
          வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
     குழக்கறியே பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
          குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.

உரை:

     உலகத்தவரே! உழக்கென்னும் கருவியை அறிவீரே ஒழிய அதுகொண்டு அளப்பதற்குரிய வழியை அறிய மாட்டீர்கள்; அவரவர் உடைய ஊரும் பேரும் அறிவீர்களே ஒழிய அவரவர்களுடைய உண்மை நிலையைச் சிறிதும் அறிய மாட்டீர்கள்; கிழக்கும் மேற்கும் அறிவீரே அன்றி அம்பலத்தின்கண் உலகியல் மாயையால் உண்டாகின்ற குற்றம் நீங்குமாறு நடித்தருளுகின்ற இறைவன் திருவடி நிலையை உணர மாட்டீர்கள்; வழக்குத் தொடுக்கவும் சண்டையிடவும் வம்பளக்கவும் அறிந்திருக்கிறீர்கள்; வடித்தெடுக்கும் முன்னே சோற்றை எடுத்து வயிறு நிறைய உண்ணத் தெரிவீர்கள்; இளங் காய்கறிகளையும் பழங்கறிகளையும் கூட்டு வகைகளையும் குழம்பென்றும் சாறு என்றும் கூறத் தெரிந்திருக்கிறீர்கள். எ.று.

     ஆழாக்கு உழக்கு என்பன வள்ளலார் காலத்து நாட்டில் வழங்கிய அளவு கருவிகள். மாயைக் கேதம் - உலகியல் மாயையால் உண்டாகும் குற்றம். வழக்கு - வழக்காடுதல். வம்பளத்தல் - வீணானவற்றைப் பேசுதல். குழக்கறி - இளங் காய்கறிகள். பழக்கறி - பழங்களோடு கலந்து செய்யும் பதார்த்த வகை.

     (34)