அறுச

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5330.

     உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும்
          பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
     துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும்
          ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
     பிணிக்கும் பீடைக்கும் உடலுளம்
          சொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
     பணிக்கும் வேலைசெய் துண்டுடுத்
          தம்பலம் பரவுதற் கிசையீரே.

உரை:

     உலகத்தவரே! நற்பண்புடைய பெரியோர்கள் அன்புடனே இடுகின்ற வேலைகளைச் செய்து உண்பன உண்டும் உடுப்பன உடுத்தும் இறைவன் ஆடுகின்ற அம்பலத்தே அடைந்து அப்பெருமானை வழிபடுதற்கு விரும்பாமல், உண்ணிக்கும் மூட்டைப் பூச்சிக்கும் கொசுக்களுக்கும் பேனுக்கும் மகிழ்ச்சி உண்டாகப் பசித்துண்டு உடுக்கும் துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஆசையுற்று ஊர்தோறும் சுற்றிப் போய் அலைந்து வருந்துகின்றீர்கள்; அன்றியும், நோய்க்கும் துன்பத்திற்கும் உடம்பையும் உள்ளத்தையும் பறிகொடுத்து வருந்துகின்றீர்கள்; இதனால் நீங்கள் பேதைகள் ஆகின்றீர்கள் அல்லவா. எ.று.

     உண்ணி - நாய் முதலிய பிராணிகளின் உடலில் படிந்து அவற்றின் உதிரத்தைக் குடித்து வாழும் ஒருவகைப் பூச்சி. இது உடி எனவும் வழங்கும். மூட்டு - மூட்டைப் பூச்சி. கொதுகு - கொசு. துணி - உடுக்கும் ஆடை. பிடி - நோய். பீடை - துன்பம். இதனால் ஊர் தோறும் வீடுதோறும் உணவுக்கும் உடைக்கும் இரந்து திரியும் மக்களை நோக்கி அறிவுரை வழங்குகின்றார்.

     (35)