5331. மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி
இருபிடிஊண் வழங்கில் இங்கே
உழவுக்கு முதல்குறையும் என வளர்த்தங்
கவற்றைஎலாம் ஓகோ பேயின்
விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும்
மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும்
கொடுத்திழப்பர் என்னே என்னே.
உரை: சிறு குழந்தைக்கும் ஒரு பிடி சோறு கொடாமல் இரண்டு பிடி உணவு கொடுப்போமாயின் இங்கே உழவுக்கு முதல் குறைந்துவிடும் என்று சொல்லிப் பொருளை மிகுவித்துச் சேர்த்து, பின்பு அவற்றை எல்லாம் பேய்பிசாசுகளின் விழாவுக்கும் புலால் கலந்துண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் நோயால் மெலிந்து இறந்து போனவருடைய இழவுக்கும் துன்பம் செய்யும் கொடுங்கோல் அரசின் வரிகட்கும் கொடுத்து உலகத்தவர் தத்தம் பொருளை இழக்கின்றார்கள்; இவர்களை என்னென்பது. எ.று.
மழவு - குழந்தை. ஊண் - இங்கே சோற்றைக் குறிக்கின்றது. ஓகோ - வியப்புக் குறிப்பு. சிறு தெய்வங்களுக்குச் செய்யும் விழாக்களைப் பேயின் விழவு என்று குறிக்கின்றார். நோயுற்று மெலிந்து இறந்தவர்களின் சடங்குகளை, “மெலித்து மாண்டர் இழவு” என்று கூறுகின்றார். இடர்க் கொடுங்கோல் - துன்பம் செய்யும் கொடுங்கோல் அரசு. பொல்லாதது என்பது பற்றி, “கொடுங்கோல் இறை” என்று கூறுகின்றார். (36)
|