5332. கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க
எனக்கழறிக் களிக்கா நின்ற
சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும்
கணச்சுகமே சொல்லக் கேண்மின்
முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால்
சாவதற்கு முன்னே நீவிர்
இடுகாட்டுப் பிணங்கண்டால் ஏத்துமினோ
எமையும்இவ்வா றிடுக என்றே.
உரை: ஆட்டுக் கறிக்குக் கடுகிட்டுத் தாளிக்க வேண்டும் என்று சொல்லி மகிழ்கின்ற சுடுகாட்டில் கிடத்திச் சுடுதற்கமைந்த பிணம் போல்பவர்களே; இவற்றை உண்பதால் உண்டாகும் சுகம் யாவையும் ஒரு கண நேரம் இருந்து மறைவனவாகும்; நாம் சொல்லுவனவற்றைக் கேட்பீர்களாக; சுடுகாடு நோக்கி வரும் எமனும் சாவதுண்டாதலால் சாவதற்கு முன்னே நீங்களும் இடுகாட்டில் புதைக்கப்படுகின்ற பிணங்களைக் கண்டால் எம்மையும் இவ்வாறு இறந்தால் புதைத்திடுக என்று வேண்டுவீரோ. எ.று.
கழறுதல் - மறுத்துச் சொல்லுதல். இறந்தால் பிணங்களைச் சுட்டெரிக்கும் இயல்பினராதலால் உலக மக்களை, “சுடுகாட்டுப் பிணங்காள்” என்று சொல்லுகின்றார். ஆட்டுக் கறி முதலியவற்றைத் தாளித்து உண்ணும் இன்பமனைத்தும் நிலையானது அல்ல என வற்புறுத்தற்கு, “இச் சுக மனைத்தும் கணச் சுகமே” என்று சொல்லுகின்றார். முதுகாடு - எதுகை நோக்கி முடுகாடு என வந்தது. இறந்த பிணத்தை மண்ணிற் புதைக்க வேண்டும் என்பது வள்ளலார் கருத்தாதலின், “நீவிர் இடுகாட்டுப் பிணம் கண்டால் ஏத்துமினோ எமையும் இவ்வாறு இடுக” என்று இயம்புகின்றார். (37)
|