5333.

     மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப்
          பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
     விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு
          கிடந்தழுது விளைவிற் கேற்பக்
     கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை
          மடிப்பாலைக் குடிப்பார் அந்தோ
     துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா
          மணித்தேவைத் துதியார் அன்றே.

உரை:

     நல்லறிவையும் திருவருள் அருள் ஞானத்தையும் பெற்று எய்தும் இன்பத்தைப் பெறுதற்கு மறந்த சிலருடைய ஊழ்வினை இயல்பை இன்னது என யாம் அறிகிலேன்; அவர்கள் குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் உண்டுத் தரையில் கிடந்து அழுது வளர்ந்து பருவ விளைவுக்கு ஏற்பக் கொதிக்கின்ற தன்மையையுடைய நல்லுணர்வை அழிக்க வல்ல கட்குடியையும் காடிப்பாலையும் குடித்துக் கெடுவர் ஐயோ; துதிக்கும் தன்மையையுடைய திருவருளை வழங்கும் நம் தேவசிகாமணியாகிய சிவத்தைத் துதிக்க மாட்டாராகின்றனர். எ.று.

     நல்லறிவு ஞானத்தை வளர்த்தலால் அதனைப் பாலாக உருவகம் செய்து, “மதிப்பாலை” என்று புகழ்கின்றார். ஊழ்வினை வகையை “விதிப்பாலை” என்று குறிக்கின்றார். கொதிப்பாலை உணர்வு - தீமை கண்டு வருந்தும் உணர்வு. தென்னை, பனை, ஈந்து முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் கள்ளாகிய பாலைக் “குடிப்பாலை” எனவும், சோற்றை வடித்து எடுக்கப்படும் காடிப்பாலை, “மடிப்பாலை” எனவும் கூறுகின்றார். துதிக்கப்படும் தன்மையையுடைய திருவருளை, “துதிப்பாலை அருள்” என்று சொல்லுகின்றார். தேவர்களுக்கெல்லாம் முடிமணியாய்த் திகழும் சிவமாகிய கூத்தப் பெருமானை, “தேவசிகாமணித் தேவு” என்று செப்புகின்றார்.

     (38)