எ
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5334. சிரிப்பிலே பொழுது கழிக்கும் இவ்வாழ்க்கைச்
சிறியவர் சிந்தைமாத் திரமோ
பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
இனிப்பிலே புகுகின்ற திலையே.
உரை: இவ்வுலகியல் வாழ்க்கையில் களியாட்டச் சிரிப்பில் பொழுதுபோக்கும் சிறுமைத் தன்மையுடையவர் மனம் மாத்திரமன்று மலைகளிலே இருந்து தவம் புரிகின்ற பெரியவர்களின் மனமும் புளிப்பு முதலிய அறுவகைச் சுவைகளில் புகுந்து ஒளிவதன்றி எள்ளத்தனையும் சிவானந்தமாகிய இனிப்புச் சுவையில் புகுவதில்லை; இதற்கு என் செய்வது. எ.று.
சிறியவர் - வெறும் களியாட்டத்தில் பொழுதைச் செலவிடுகின்ற அற்பர். இதற்குக் காரணம் இவர்களுடைய சிறுமைத் தன்மையாதலால் சிறியவர் என்பதற்கு இது பொருளாயிற்று. மலைகளில் உள்ள குகைகளில் இருந்து தவம் செய்கின்ற பெரியோர்களை, “பொருப்பிலே தவஞ் செய் பெரியர்” என்று புகழ்கின்றார். கசப்பு - கயப்பு என வந்தது. கார்ப்பொடு கலந்த எரிப்பு மிளகும் மிளகாய் போல்பவற்றின் கார மிகுதியை, “கார்ப்பொடு கலந்த எரிப்பு” என்று கூறுகின்றார். இதனால் களித்துச் சிரித்துத் திரியும் சிறியவர் முதல் தவஞ் செய்யும் பெரியவர் ஈறாகவுள்ள அனைவரும் அறுவகைச் சுவைகளிலும் கருத்தைச் செலுத்தி வருந்துகின்றார்களே தவிர சிவானந்தம் பயக்கும் இன்பத்தை விரும்புகின்றார்களில்லை என அவர் பொருட்டு இரங்குகின்றார். (39)
|