கல
கலிநிலைத்துறை
5335. பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
உரை: அம்மா! கொன்றைப் பூவாலாகிய மாலையை அணிந்த சிவந்த சடையை உடையவரும் புகழ் பொருந்தினவரும் தேவர்கள் நிறைந்த தில்லையில் உள்ள ஞான சபையின்கண் எழுந்தருளும் திருவாளருமாகிய சிவபெருமான் வேண்டுவதை நல்குவார் போல இங்கு வந்து என் மனைக்கும் புகுந்து தமது அழகெல்லாம் காட்டி என்பால் வருக என்று சொன்னார்; அவர் சூதை நான் என்னென்று சொல்லுவேன். எ.று.
கொன்றைப் பூமாலையைப் “பூவார் கொன்றை” என்று புகல்கின்றார். தேவர்கள் நிறைந்து விளங்கும் தில்லை ஞான சபையை, “தேவார் தில்லைச் சிற்சபை” என்று சிறப்பிக்கின்றார். இது தலைவி தலைவனது வரவு உரைத்து அவனது சொல்லை வியந்து கூறியதாகும். (40)
|