எ
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5336. நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
நான்செயத் தக்கதே தென்பாள்
செல்வினை ஒன்றுந் தெரிந்திலேன் ஐயோ
தெய்வமே தெய்வமே என்பாள்
வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
விருப்பிலர் என்மிசை என்பாள்
வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
வருந்துவாள் நான்பெற்ற மகளே.
உரை: நல்ல புண்ணியத்தைச் சிறிதளவும் செய்திலேன் என்றும் நான் செய்யத் தக்கது யாதாம் என்றும் பயன் தரும் புண்ணியங்கள் ஒன்றும் நான் அறியேன் தெய்வமே என்றும் சொல்லி என் மகள் வருந்துகிறாள்; எல்லாவற்றையும் வெல்லும் செயல்களைச் செய்தருளும் சிவபெருமான் அம்பலத்தில் திருநடனம் புரிகின்றார்; என்றாலும் என்பால் அன்பு இலராகின்றார்; என்றும் கொடிய வினைகளையுடைய நான் யாது செய்வேன் என்று மனம் துடித்து நான் பெற்ற மகள் வருந்துகின்றாள். எ.று.
நல்வினை - நல்ல சிவபுண்ணியம். நயந்திலேன் - விரும்பினேனில்லை. பயன் தரும் நற்செயல்களைச் “செல்வினை” என்று தெரிவிக்கின்றார். மக்கள் தேவர் முதலியோர் செய்யும் வினைகள் அனைத்தையும் வெல்லும் சிறப்புடைய அருள் வினையை, “வெல்வினை என்று விளம்புகின்றார். தான் நினைந்தபோது வாராமைக்குக் காரணம் தனது பொல்லாத வினை என்று கருதுகின்றாளாதலால், “வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்” என்று நற்றாய் தன் மகளாகிய தலைவி படும் வருத்தம் கண்டு உரைக்கின்றாள். (41)
|