எண
எண்சீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5337. நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
வாதநடம் புரிகருணை மாநிதியர் வரதர்
வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
உரை: நாத தத்துவத் தலைவரும், அருட்பெருஞ் சோதியை யுடைய நாயகரும், என்னை விரும்பிக்கொண்ட ஒப்பற்ற தலைவரும், ஞான சபைக்கு முதல்வரும், காளியோடு வாத நடனம் புரிந்த கருணைச் செல்வரும், விரும்பிய வரங்களை நல்கும் வரதரும், அருள் வள்ளலும், எல்லாம் செயல் வல்லவரும், பெரிய நல்லவருமாகிய சிவபெருமான் என்னிடத்தே அன்புடன் வருகின்றார் என்று பரநாத தத்துவமாகிய பரை மகிழ்ச்சியுடன் ஒலிக்கின்றது; அத்தர லோகத்து துந்துபியும் குற்றமற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே தலைவியாகிய என்னுடைய மகள் இருக்கையிலிருந்து எழுவதும் தொழுவதுமாக இருக்கின்றாள்; யான் யாது செய்வேன். எ.று.
நாதர் - நாத தத்துவத்திற்குத் தலைவர்; ஓசை ஒலிகட்கு எல்லாம் தலைவர் என்றுமாம். நயந்து கொளல் - விரும்பி ஆட்கொள்ளுதல். காளிதேவியின் சினம் தணியுமாறு எதிர் நின்று வாத நடனம் புரிந்தாராதலால் சிவனை, “வாத நடம் புரி கருணை மாநிதியார்” என்று புகழ்கின்றார். இதனைக் “கன்றிவரு கோப மிகுகாளி கதம் ஓவ நின்று நடமாடி” (ஐயா) என்று திருஞானசம்பந்தர் உரைப்பது காண்க. வரம்பில் ஆற்றல் உடையவன் என்பது பற்றி, “எல்லாம் வல்லவர்” என்று உரைக்கின்றார். சுத்த தத்துவத்துள் வகுத்துக் காட்டப்படும் பரநாத தத்துவத்தைப் பரை என உருவகம் செய்கின்றாராதலின், “பரநாதம் தொனிக்கின்றது” என்று பகர்கின்றார். அந்தர துந்துபி - அமல லோகத்தில் ஒலிக்கப்படும் துந்துபி என்னும் வாத்தியம். நாதம் களிப்புண்டாகவும், துந்துபி குற்றம் நீங்கவும் ஒலிப்பன என்றற்கு, “களிப்புறவே தொனிக்கின்றன” என்றும், “ஏதமற முழங்குகின்றது” என்றும் தலைவி சொல்லுகின்றாள். (42)
|