அறுச
அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
5338. அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற
அரசேநின் அடிமேல் ஆணை
என்பாடொன் றிலைஎன்னால் துரும்பும்அசைத்
திடமுடியா திதுகால் தொட்டுப்
பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு
நீதானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும்
மாஇருக்க ஒண்ணா தண்ணா.
உரை: அன்பு மிகுகின்ற அழகிய அம்பலத்தில் ஆடுதல் புரிகின்ற அருளரசாகிய சிவனே! நின் திருவடி மேல் ஆணையாகச் சொல்லுகின்றேன்; என்பால் ஒரு குற்றமில்லை; என்னால் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது; இது தொடங்கி அழகிய செயல்களை எவ்வகையாலேனும் செய்துகொண்டு நீயே என்னை ஆதரித்தருள வேண்டும்; இதனை உன்னிடத்தே சொல்லிக்கொள்கின்றேன்; அண்ணலே நீ இனிச் சும்மா இருக்க முடியாது. எ.று.
அன்புடைய அன்பர்கள் வந்திருந்து அன்புப் பணி செய்து இன்பம் மிகுகின்றாராதலால் அம்பலத்தை, “அன்பொடு திருப்பொது” என்று பாராட்டுகின்றார். பொன்பாடு - அழகிய செயல்கள். புரத்தல் - ஆதரித்தல். யான் செய்வன யாவையாயினும் அவற்றை ஏற்று என்னை ஆதரித்தருள வேண்டும் என்பாளாய்த் தலைவி, “உன்பாடு நான் உரைத்தேன்” என்று உரைக்கின்றாள். (43)
|