5339. முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே
உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில்
இலைஅதனால் எல்லாம் வல்லோய்
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய்
அருட்சோதி அளித்துக் காத்தல்
உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா
டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
உரை: அப்பனே! முன்னே செய்வினை பின்னே பயன் தந்திடும் என்று உரைப்பவர் உரைக்கும் மொழிகள் எல்லாம் பொருந்திய இவ்வுலகத்தில் என் அறிவின்கண் நிலைப்பதில்லை; அதனால் எல்லாம் வல்லவனாய் அன்பு நிலவும் திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்ற பெருமானாகிய நீ உனது அருள் ஞான விளக்கமாகிய சோதியை அளித்து என்னைக் காத்தல் வேண்டும்; இதனை உன்பால் தெரிவித்துக்கொள்கின்றேன்; வேறு எனக்குச் செயல் உண்டோ; நீயே உரைத்தருள்க. எ.று.
முன்னை வினை - முன்பாடு எனப்படுகின்றது. படுதல் - பாடு எனப்படும். எல்லாம் இன்பமயமாகத் தோன்றும் என்றற்கு, “இன்பாடும் இவ்வுலகு” என்றும், திருவருள் ஞான விளக்கத்தை, “அருட் சோதி” என்றும் உரைக்கின்றார். அன்பு பெருகுகின்ற ஞானத் திருவம்பலம் என்றற்கு, “அன்பாடு திருப்பொது” என்று சிறப்பிக்கின்றார். (44)
|