5340. உன்ஆணை உன்னைவிட உற்றதுணை
வேறிலைஎன் உடையாய் அந்தோ
என்நாணைக் காத்தருளி இத்தினமே
அருட்சோதி ஈதல் வேண்டும்
அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த
பெருங்கருணை அரசே என்னை
முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த
இந்நாள்என் மொழிந்தி டாதே.
உரை: என்னை ஆளாகவுடைய பெருமானே! உன்னைவிடச் சிறந்த துணை உலகில் எனக்கு வேறே இல்லை; அந்தோ! என்னுடைய நாணத்தைக் காத்தருளி இன்றே உனது அருள் ஞானமாகிய அருட்சோதியைத் தந்தருள வேண்டுகிறேன்; அக்காலத்தில் நான் வருந்தி மெலியாதபடி அருள் புரிந்த பெரிய கருணையையுடைய அருளரசே! என்னை முன்னம் ஆண்டருளினாய்; நினக்கு அடியவன் என்று உலகம் அறிந்த இந்நாளில் என்னைக் கைவிட்டால் அது உன்னை என்ன சொல்லி இகழாது காண். எ.று.
தாம் உரைப்பது உண்மை என்பது புலப்பட, “உன் ஆணை” என்று எடுத்து மொழிகின்றார். அருட்சோதி வழங்குகின்றார் எனப் பலகாலும் பலர் அறிய சொல்லித் திரிந்த எனக்கு இத்திறமை இன்றேனும் உனது அருட்சோதியை நல்காவிடத்து எனக்குத் தீராத மானம் எய்துமென்று புலம்புமாறு தோன்ற வடலூர் வள்ளல், “என் நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல்வேண்டும்” என்று மொழிகின்றார். முன்பும் சிவபெருமான் அருள் ஞானச் சோதியை அருள் புரிந்தாராதலின் அதனை வற்புறுத்தற்கு, “அந்நாள் நய்யாதபடி அருள் புரிந்த பெருங் கருணை அரசே” என்று ஓதுகின்றார். நைதல் - மெலிதல். உலகறிந்த இந்நாளிலும் எனக்கு உனது திருவருளைச் செய்யாவிடில் உலகம் உன்னைப் பழிக்கும் என்பாராய், “நின் அடியவன் என்று உலகறிந்த இந்நாள் என் மொழிந்திடாது” என இயம்புகின்றார். (45)
|