5341.

     தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித்
          தெனைஆண்ட துரையே என்னை
     நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட
          பதியேகால் நீட்டிப் பின்னே
     வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும்
          தாழ்ந்திடில்என் மனந்தான் சற்றும்
     தாங்காதே இதுநினது தனித்ததிரு
          வுளமறிந்த சரிதம் தானே.

உரை:

     உறக்கமின்றி விழித்திருக்கும் உளவை அறிவித்து என்னை ஆண்டுகொண்ட தலைவனே! என்னை நீங்காமல் என் உயிரிற் கலந்து கொண்டிருக்கும் பதிப்பொருளாகிய சிவபெருமானே! என்பாற் வருதற்குத் திருவடியை நீட்டிப் பிறகு பின்வாங்காமல் விரைந்து இவ்விடத்தே நீ வந்து அருளுதல் வேண்டும்; தாமதித்தால் என் மனம் சிறிதும் துயரத்தைப் பொறுக்காது; எனது இயல்பை ஒப்பற்ற திருவுளம் அறிந்த செய்தி யன்றோ. எ.று.

     தூங்காமல் விழித்திரு என்று உபதேசிப்பது வடலூர் வள்ளலின் இயல்பாதலால், அந்நெறியை அவர் தொடக்கத்தில் தமக்கு அருளிய திறத்தை எடுத்துரைப்பாராய், “தூங்காதே விழித்திருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே” என்று சொல்லுகின்றார். சூது - சூழ்ச்சி. உயிர்க்குயிராய்க் கலந்து கொண்டிருப்பது பரமனுடைய பண்பாதலால், “என்னை நீங்காதே என் உயிரிற் கலந்து கொண்ட பதியே” என்று பகர்கின்றார். உன்னுடைய பிரிவை என் மனம் சிறதளவும் பொறாது என்பதை இறைவன் நன்கறிவான் என்பதற்கு, “இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம்” என்று இயம்புகின்றார். சரிதம் - வரலாறு.

     (46)