5342.

     இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட்
          டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
     சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம்
          தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
     பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள்
          எங்குளர்காண் பதியே என்னை
     வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்
          பிள்ளைஎன மதித்து டாயே.

உரை:

     பதியாகிய சிவனே! காட்டில் இயங்குகின்ற சிங்கம் புலி கரடி என்பவற்றின் பெயரைக் கேட்டளவில் மனம் நடுங்கி ஒடுங்கி யிருந்த நான் ஊரில் வெற்றி பொருந்திய காளி கோயிலைக் கண்ட மாத்திரத்தே மனம் குழைந்து தளர்ச்சியுற்றேன்; என்னைப் போல் பயங்காளிப் பயலாய்ப் பயந்தவர்கள் யார் இருக்கின்றார்கள்; என்னை விளங்குகின்ற தொண்டர்களில் ஒருவன் என நினைப்பது ஒழிக; என்னை நின் கைப்பிள்ளைகளில் ஒருவனாக நினைக்க வேண்டும். எ.று.

     ஆளி - சிங்கம், காளிக்கோயில் - காளியின் திருவுரு நிறுத்திய கோயில். வயங்கு ஆளில் ஒருவன் - வலிமையால் விளங்குகின்ற ஆட்களில் ஒருவன்; ஈண்டு ஆள் என்பது அச்சமில்லாத திருத்தொண்டர் மேல் நின்றது.

     (47)