5343. சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர்
பலபுகலத் தினந்தோ றுந்தான்
உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப்
பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பொற்
றிடஅழியாத் தேகன்ஆகப்
பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப்
புரிகஎனைப் பெற்ற தேவே.
உரை: என்னைப் பெற்ற தெய்வமாகிய சிவபெருமானே! குற்றம் பொருந்திய சிறுசெயல்களைப் புரிந்தொழுகும் உலகியல் சிற்றொழுக்கத்தையுடைய மக்களாயினார் கண்டு பல சொல்லுமாறு நாள்தோறும் பெரிய செயல்களைச் செய்ய அறியாத சிறுவனாகிய என்னைப் பற்றி வருத்துவது நினக்கு மகிழ்ச்சியோ காண்; பிறரை வருத்துகின்ற செயல்களை எல்லாம் போக்கி எல்லாச் சித்திகளையும் பெற்று அழியா உடம்புடையவனாகப் பெறுகின்ற அருட்செயலை எனக்கு நல்கி வேறு உனக்குரிய செயல்களையும் புரிவாயாக. எ.று.
குற்றம் செய்வதால் சிறுமை உண்டாவது பற்றிச் “சிறு செயல்” என்று சொல்லுகின்றார். சிற்றறிவும் சிறுமை வொழுக்கமும் உடைமை பற்றி மக்களை, “உலகச் சிறுநடையோர்” என்று உரைக்கின்றார். உறுசெயல் - பெருமை தரும் செயல். கரும சித்தி யோக சித்தி ஞான சித்தி ஆகிய மூன்றையும், “எல்லாச் சித்தி” என இயம்புகின்றார். அழியாத் தேகனாகப் பெறுசெயல் - மரணமில்லாத பெருவாழ்வு உடையவனாகப் பெறுதல். இதுவும் இறைவன் திருவருளாலன்றி எய்தலாகாமை தோன்ற, “மறுசெயலைப் புரிக” என்று மொழிகின்றார். தேகம் - தேகத்தை யுடையவன். (48)
|